மனமே...மனமே!


உன் வசந்த வாசலைத் திறந்து வை
உள்ளே வருபவர்கள் உன்னதமானவர்களா
காந்தம் போல் கவர்ந்திழு
கடைசி வரை மறவாதே!
புதுமையைத் தேடிப்புறப்பட்டு விட்டாயா!
புலமையைப் பற்றுக் கொண்டிருப்பதன் காரணம்தான் யாதோ
கண்டொன்று பேசுகிறாய்
கல்மேல் எழுத்தாய்க் கருத்திலொன்று கொண்டுள்ளாய்
விளக்குச் சுடரைப் பழமென்று நம்பும் 
விட்டில் பூச்சி போல் 
நயமாய்ப் பேசும் நயவஞ்சகர்களை நம்பி
நாண் இழந்து போகாதே!
வான்பரப்பில் வட்டமிடும் வண்ணத்திப் பூச்சி போல்
எண்ணச்சிறகுகளைப் பறக்கவிடு
தேனெடுக்கப் பூவில் அமரும் தேனீ போல்
புவியெங்கும் கரு தேடு 
கவிதைக்குப் பொருள் தேடு!
மனமே! நீ ஒரு மர்மம்
மறைந்திருந்து ஆட்டிப் படைக்கும் ஓர் ஆச்சரியம்
அரிதாரம் பூசி உலகில் நடமாடும் அவதாரம்
நரிபோல் உடலுள் நடனம் புரியும் நயவஞ்சகன்
ஒன்றை நினைத்து ஒன்றைச் செய்யும் ஓர் அறணை
வருகிறேன் உன்னை அடக்கவோர் ஆயுதம் கொண்டு
வடிக்கிறேன் ஓர் வடிவமாய்
இடம் தராது இழுத்துப் பிடிக்கிறாயா
மூச்சை அடக்கி முழுமூச்சாய் முன்னேறுகிறேன்
தியானத்தில் நீ நியாயம் காண்பாய்
தியானத்தில் நீ நியாயம் காண்பாய்