வாழ்க்கை


நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை

  • வாழ்க்கை
    அநாகரிகமானதுதான்

    500 ரூபாய்


    500 ரூபாய்

    200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
    ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

    கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

    பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
    அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
    “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
    அனைவரும் கையைத் தூக்கினர்.

    அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
    “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
    அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

    அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்
    அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
    தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
    நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

    இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.
    அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
    தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
    ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க

    மனமே...மனமே!


    உன் வசந்த வாசலைத் திறந்து வை
    உள்ளே வருபவர்கள் உன்னதமானவர்களா
    காந்தம் போல் கவர்ந்திழு
    கடைசி வரை மறவாதே!
    புதுமையைத் தேடிப்புறப்பட்டு விட்டாயா!
    புலமையைப் பற்றுக் கொண்டிருப்பதன் காரணம்தான் யாதோ
    கண்டொன்று பேசுகிறாய்
    கல்மேல் எழுத்தாய்க் கருத்திலொன்று கொண்டுள்ளாய்
    விளக்குச் சுடரைப் பழமென்று நம்பும் 
    விட்டில் பூச்சி போல் 
    நயமாய்ப் பேசும் நயவஞ்சகர்களை நம்பி
    நாண் இழந்து போகாதே!
    வான்பரப்பில் வட்டமிடும் வண்ணத்திப் பூச்சி போல்
    எண்ணச்சிறகுகளைப் பறக்கவிடு
    தேனெடுக்கப் பூவில் அமரும் தேனீ போல்
    புவியெங்கும் கரு தேடு 
    கவிதைக்குப் பொருள் தேடு!
    மனமே! நீ ஒரு மர்மம்
    மறைந்திருந்து ஆட்டிப் படைக்கும் ஓர் ஆச்சரியம்
    அரிதாரம் பூசி உலகில் நடமாடும் அவதாரம்
    நரிபோல் உடலுள் நடனம் புரியும் நயவஞ்சகன்
    ஒன்றை நினைத்து ஒன்றைச் செய்யும் ஓர் அறணை
    வருகிறேன் உன்னை அடக்கவோர் ஆயுதம் கொண்டு
    வடிக்கிறேன் ஓர் வடிவமாய்
    இடம் தராது இழுத்துப் பிடிக்கிறாயா
    மூச்சை அடக்கி முழுமூச்சாய் முன்னேறுகிறேன்
    தியானத்தில் நீ நியாயம் காண்பாய்
    தியானத்தில் நீ நியாயம் காண்பாய்

    மீண்டும் ஒரு தேர்தல்


    மீண்டும் ஒரு தேர்தல் வருகிறது! 
    வாக்காளனே!
    உன் வாக்குகளுக்கு விலை கூறி
    வாடிக்கையாளர்கள் வருவார்கள்!
    வசமிழந்து விடாதே!
    நீ
    வாக்குகளுக்காய் வாங்கும் பணம்
    உன் மனசாட்சிக்கும் சேர்த்துதான்!
    உன்
    மனசாட்சிக்கு விலை வைக்கும்
    அரசியல்வாதிகள் நாளை
    உன்னையே விற்றுவிடுவார்கள்!
    நீ
    வாக்களிக்கும்போது
    உன்
    ஆள்காட்டி விரலில் இடும் மையால்தான்
    நாளை வரும் அரசுக்கு
    அனுமதி கையொப்பம் இடுகிறாய்!
    மனசாட்சி உன்னோடே இருக்கட்டும்!
    மக்களின் ஆட்சி நன்றாய் மலரட்டும்!